'Welcome' | 'நல்லறிவு மலரட்டும்'

Tuesday, September 05, 2006

 
மூன்றாம் கொள்கை 'ஸலஃபு'


குர்ஆன் சுன்னாவைக் கடந்து மூன்றாவதுக் கொள்கையாக, அல்லது குர்ஆன் சுன்னாவிலிருந்து பெறப்பட்ட ஒரு கொள்கையாக இந்தக் கொள்கை விளக்கப்படுகின்றது.

ஸலஃபுக் கொள்கையை சரிகாணக்கூடிய அறிஞர்கள், இந்தக் கொள்கையின் அவசியத்தை இப்படி விளக்குகிறார்கள்.

''குர்ஆன் சுன்னாவை விளங்குவதில் ஆரம்பக்காலத்தில் வாழ்ந்தவர்களுக்கே முதலிடம். ஏனெனில் மூன்றுத் தலைமுறைகளைப் பற்றி நபி(ஸல்) குறிப்பிட்டு அவர்களை சிறந்தவர்கள் என்று வரிசைப்படுத்தியுள்ளார்கள். அதில் முதலிடம் பிடிப்பது நபித்தோழர்கள். எனவே மார்க்கத்தை விளங்க அவர்களின் விளக்கம் அவசியமாகும். அவர்களிடமிருந்து கிடைக்காத விளக்கங்கள் பிறகு வந்த விளக்கங்கள் வழிகேட்டை ஏற்படுத்தி விடும். அப்படிப்பட்ட வழிகெட்ட கூட்டங்கள் பல உருவாயின. எனவே குர்ஆன் சுன்னாவிற்கு நாமாக விளக்கங்கள் கொடுக்காமல் முந்தி சென்ற ஸலஃபுகளின் (ஸஹாபாக்களின்) விளக்கத்தையே ஏற்க வேண்டும்''.

''குர்ஆன் சுன்னாவிற்கு சொந்த விளக்கம் கொடுக்கும் போது அது புதிது புதிதாக புதியக் கொள்கையையும் கூட்டத்தையும் உருவாக்கி விடுகின்றது. எனவே முந்தி சென்றவர்களின் வழிகாட்டலே மிக சரியானதாகும்'' என்பது அந்த அறிஞர்கள் விளக்கமாகும்.

பொதுவாக பார்க்கும் போது அறிஞர்களின் இந்த விளக்கம் சரியானதுதான் என்றாலும் சற்று ஆழமாக அணுகும் போது இதை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது என்று விளங்கலாம். இஸ்லாம் என்பது கொள்கை, அந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களுக்கான சட்டதிட்டங்கள் என்ற இரு அடிப்படைகளை கொண்டுள்ளது. கொள்கையும் அதன் விரிவாக்கமும், சட்டங்களும் அதன் விரிவாக்கமும் பரந்த நிலையைக் கொண்டதாகும்.

(இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழும் குடிமக்களுக்கான சட்டங்களைப் பற்றி நாம் இங்கு பேசவில்லை).

கொள்கையைப் பொருத்தவரை அதன் அடிப்படையான நம்பிக்கைகளில் எத்தகைய கருத்து வேறுபாடும் ஸஹாபாக்கள் காலத்தில் ஏற்படவில்லை. அதன் மீதே முஸ்லிம் உம்மத் நிலைத்து நிற்கவேண்டும். அடிப்படை நம்பிக்கையான கொள்கைகளில் இடற்பாடு ஏற்படும் போது அது மறுமை வாழ்க்கையை பாதித்து விடும்.

சட்டங்களை புரிந்துக் கொள்ளக் கூடியவற்றில் நபித்தோழர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதே கிடையாது என்று எவராலும் கூறமுடியாது. சட்டங்களின் விரிவாக்கத்தை புரிந்துக் கொள்ளும் போக்கில் பல மாறுபட்ட கருத்தோட்டங்கள் நபித்தோழர்களுக்கு மத்தியில் இருந்துள்ளன. அடுத்தக் காலகட்டமான தாபியீன்கள் கூட குர்ஆன் சுன்னாவில் இடம் பெறும் பல வார்த்தைகளுக்கு பொருள் கொடுப்பதில் மாறுபட்ட விரிவான பார்வையை கொண்டிருந்தார்கள் என்பதை குர்ஆன் சுன்னாவுடனும் அதை விளக்கும் பெருங்கிரதங்களுடனும் நேரடித் தொடர்புக் கொண்டுள்ள எவராலும் காண முடியும்.

சட்டங்களை புரிந்துக் கொள்ளக் கூடிய போக்கில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இந்த உம்மத்தை வழிகேட்டில் கொண்டு போய் விட்டு விடும் என்று எந்தக் காலகட்டத்திலும் எந்த அறிஞரும் ஒரு கருத்தை முன் வைக்கவில்லை. சட்ட நுணுக்கங்களை புரிந்துக் கொள்வதில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் பாரதூரமான காரியம் என்று எவராவது கருதினால், அத்தகைய போக்கு சமூகத்தை திசை திருப்பும் என்று எவராவது வாதிட்டால் அந்த வாதத்தை இந்த காலகட்டத்தில் மட்டும் பொருத்திப் பார்ப்பதில் எந்த நியாயமுமில்லை.

இதுபற்றி விரிவாக பார்ப்பதற்கு முன்னால் குர்ஆன் சுன்னாவிலிருந்து எதையும் நேரடியாக சிந்தித்து விளங்கக் கூடாது. நபித்தோழர்களின் வழியையே பின்பற்ற வேண்டும் அதுதான் நேரான வழி என்று வாதிடுபவர்கள் தங்கள் வாதத்திற்கு என்னென்ன ஆதாரங்களை எடுத்து வைக்கிறார்கள்? அவர்கள் எடுத்துக் காட்டும் ஆதாரங்களும், அவர்களின் வாதங்களும் ஒத்துப் போகின்றதா.. என்பதை வரிசையாகப் பார்த்து விட்டு தொடர்வோம்.

குர்ஆன் சுன்னாவிலிருந்து எதையும் இன்றைக்கு நாம் நேரடியாக சிந்தித்து விளங்கக் கூடாது என்ற வாதத்திற்கு குர்ஆனிலோ சுன்னாவிலோ எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்பதை முதலில் கூறிக் கொள்கிறோம்.

நபித்தோழர்களை பின்பற்ற வேண்டும் என்பதற்கு ஸலஃபுகள் எடுத்துக் காட்டும் ஆதாரங்களை வரிசையாகப் பார்த்துவிட்டு தொடர்வோம்.

(குறிப்பு: ஸலஃபுகளுக்காக தொடங்கி நடத்தப்பட்டு வரும் 'இஸ்லாம்கல்வி' என்ற இணையத்தளத்தில் டாக்டர் நுபார், ஜமால் மதனி உட்பட இன்னும் பல மார்க்க அறிஞர்களின் வீடியோ தொகுப்புகள் கிடைக்கின்றன இவர்களில் பலர் ஸலஃபுக் கொள்கையை சரிகாணக் கூடியவர்கள். ஆனாலும் ஸலஃபுக் கொள்கை என்றால் என்ன என்பது பற்றி மேலோட்டமான விளக்கங்களே அங்கு கிடைக்கின்றன. விரும்பியவர்கள் அந்த ஸலஃபுகளின் இணையத்தளம் சென்று பார்த்துக் கொள்ளலாம்)

ஆதாரம் 1:
முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக முந்திக்கொண்டவர்களும், அவர்களை நற்கருமங்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்களைப் அல்லாஹ் பொருந்திக் கொண்டான் அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும். 9:100

இந்த வசனத்தில் குறிப்பிடப்படுவது அதிலும் மிக சிறப்பாக (அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்) குறிப்பிடப்படுவது நபித்தோழர்களைத்தான். அவர்களைப் பின் தொடருபவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வதாக சொல்கிறான். அவர்களுக்கு பின்னால் வந்தவர்களுக்கு இத்தகைய பாக்கியம் கிடைக்குமா என்பது தெரியாத ஒன்றாகும். எனவே இறைவன் குறிப்பிடுவது போன்று அவர்களைப் பின்பற்றுவதுதான் சிறந்ததாகும். (*ஸலஃபுகள்)

விளக்கம்:
நபித்தோழர்கள் இறைவனின் அருளுக்குரியவர்கள் என்பதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. (அவர்களைப் பற்றிய முழுமையான ஞானம் இறைவனுக்கு மட்டுமே தெரியும்) அதற்காக அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்ற வாதத்தில் மட்டும் உடன்பாடில்லை. காரணம், மேற்கண்ட இந்த வசனத்தில் இறைவன் பொதுவாகப் "பின்பற்றுங்கள்" என்று சொல்லாமல் 'இஹ்ஸான்'களில் பின்பற்றுபவர்கள் என்றுதான் குறிப்பிடுகிறான்.

இஹ்ஸான் என்றால் என்ன?
இதற்கு அந்தக் கொள்கையுயுடைடயவர்கள் இப்படியும் அப்படியுமாக விளக்கம் கொடுக்கிறார்கள். எந்த விளக்கம் கொடுத்தாலும் சரிதான் ஒன்றுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஏந்த நிபந்தனையுமில்லாமல் பின்பற்றத் தகுதியுள்ளவர்கள் இறைத்தூதர்கள் மட்டும் தான். பிற எவரைப் பின்பற்றுவதாக இருந்தாலும் இறைவன் அதற்கு நிபந்தனை விதிக்காமலில்லை. 'இஹ்ஸான் என்பதற்கு என்ன விரிவான பொருள் கொடுத்தாலும் சரி அது ஒரு நிபந்தனையா இல்லையா என்பதை அவர்கள் விளக்க வேண்டும். பொதுவாக பின்பற்றலலாம் என்றால் இஹ்ஸான் என்ற நிபந்தனையை இறைவன் ஏன் விதிக்க வேண்டும் என்ற கேள்விக்கு அவர்களிடம் பதிலிருக்காது.

நபித்தோழர்களை மட்டுமல்ல, இறை நம்பிக்கைக் கொண்ட யாரைப் பின்பற்றுவதாக இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் இந்த 'இஹ்ஸான்' என்ற நிபந்தனை பொருந்தி விடும். ஆனாலும் இறைவன் நபித்தோழர்களுடன் இதை பொருத்துவதற்கு நியாயமான காரணம் உள்ளது. பிற கோடான கோடி இறை நம்பிக்கையாளர்களை விட இவர்கள் ஈமானால் முந்தியவர்கள், நபியிடம் பாடம் கற்றவர்கள், கொள்கையில் இறுதி மூச்சுவரை உறுதியுடன் நின்றவர்கள். இப்படி சிறப்புக்குரியவர்களாக அவர்கள் இருப்பதால் அவர்கள் முன்னுதாரணமாக்கப்பட்டுள்ளார்கள். ஆனாலும் நபியுடைய அந்தஸ்த்தில் வைத்து பின்பபற்ற வேண்டாம் அங்கிருக்கும் இஹ்ஸான்களை மட்டும் எடுத்துக் கொண்டு பின்பற்றுங்கள் என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

இஹ்ஸானில் பின்பற்றுங்கள் என்று இறைவன் வழிகாட்டி இருக்கும் போது பொதுப்படையாக பிறரைப் பின்பற்றுவதற்கு இந்த வசனத்தை இவர்கள் எப்படி ஆதாரமாக்குகிறார்கள் என்பது ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது.

வசனம் சொல்வதென்ன!
ஒரு வசனத்தின் பொருள் என்னவென்பதை விளங்குவதற்கு அந்த வசனத்தின் வார்த்தை அமைப்புகளை ஊன்றி கவனிப்பது முக்கியமாகும். இந்த வசனத்தின் வார்த்தை அமைப்பை கவனித்துப் பொருள் எடுத்தால் இஹ்ஸானில் பின்பற்றுவது என்றால் என்னவென்பது கூட விளங்கி விடும்.

முஹாஜிர்களிலும் (மக்காவிலிருந்து நாடு துறந்தவர்களிலும்) அன்சாரிகளிலும் (மதீனாவாசிகளிலும்) யார் முந்திக் கொண்டார்களோ அவர்களை யார் இஹ்ஸானில் பின்பற்றுகிறார்களோ அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். இதுதான் வசன அமைப்பு.

மக்காவாசிகளும் சரி, மதினாவாசிகளும் சரி இவர்கள சம அந்தஸ்த்துடையவர்களாக இருக்கவில்லை. மக்கா வெற்றிக்குப் பின் இஸ்லாத்தை ஏற்றவர்களை விட நபி(ஸல்) அவர்களின் ஆரம்பக்கால பிரச்சாரத்தால் கவரப்பட்டு இஸ்லாத்தை ஏற்று அதனால் பெரும்துன்பத்திற்கு ஆளானவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் அந்தஸ்த்தால் உயர்ந்தவர்கள். அவர்களுக்குத்தான் முஹாஜிர்கள் என்ற அந்தஸ்த்து கிடைத்தது. அதே போன்று தான் மதினாவாசிகளும். குறிப்பாக சொல்வதாக இருந்தால் அகபா உடன்படிக்கை முதல் பத்ருபோர் வரை உள்ளக் காலகட்டத்தில் இஸ்லாத்தில் இணைந்தவர்கள், அதன் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள் மகத்தான அந்தஸ்த்தை பெற்றார்கள். தன்னலம் பாராமல் இறைவனுக்காக இவர்கள் மேற் கொண்ட இந்த வாழ்க்கை முறையை இறைவன் இந்தவசனத்தில் உதாரணமாக்குகிறான். அவர்களின் நம்பிக்கையும் தியாகமும் இந்த வசனத்தில் இஹ்ஸான் என்று சுட்டிக் காட்டப்படுள்ளது. இதற்கு மாற்றமாக இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கும் இதையே அளவுகோளாக கொண்டால் இன்றைக்கும் பைத்துதுல் முகத்தஸை நோக்கித் தொழலாமா...? ஏனெனில் முன் சென்றவர்களில் பலர் பைத்துல் முகத்தஸை பார்த்து தொழுதுள்ளார்கள். இதுபோன்று பல சம்பவங்களை (சட்டங்களை) குறிப்பிடலாம். பொதுவாக இந்த வசனத்தை நபித்தோழர்களைப் பின்பற்றலாம் என்பவர்கள் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும்.

தொடர்வேன் இறைவன் நாடட்டும்





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]